நல்லிணக்கம்

2015 ஜனவரியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் “நல்லிணக்கம்” இலங்கையில் அதிகம் பேசப்படும் விடயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. பாராளுமன்றம், ஊடகங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை எவையும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த இருபத்தாறு மாதங்களில் நல்லிணக்கத்தை நோக்கி இலங்கை எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கின்றது என்று வினவினால் முன்னேற்றம் ஏதுமில்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கும். காணிகள் விடுவிப்பு, காணாமற்போனோர் அலுவலகம், நிரந்தர தீர்வு என்பவையெல்லாம் அரசின் மீதும் ஒடுக்குமுறைகள் காரணமாக நல்லிணக்கத்தின் மீதும் நம்பிக்கையிழந்திருக்கும் சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியேயாகும்.ஆகவே இவற்றை நல்லிணக்கத்தை நோக்கிய நீண்ட பாதையில் பயணிப்பதற்கான முன்னேற்பாடுகளாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்மையில் நீடித்து நிலைக்கும் நல்லிணக்கத்தை அடைவதற்கு மிகப்பெரும் தடைக்கல் இனவாதிகளோ அல்லது நடுநிலையாளர் போர்வையில் இனவாத விஷத்தை கக்கும் நச்சுப்பாம்புகளோ அல்ல மாறாக ஏனைய சமூகங்களை/இனங்களை சார்ந்த மக்களின் பிரச்சனைகளையும் அபிலாசைகளையும் அறிந்து கொள்வதிலும் அவர் தம் போராட்டங்களின் பின்னால் உள்ள நியாயங்களை புரிந்து கொள்வதிலும் மக்கள் காட்டும் அலட்சியமே ஆகும்.இவ் விடயத்தில் பாமர மக்களுக்கும் நன்கு படித்த சமூகத்துக்கும் அதிக வித்தியாசமில்லை.

பெரும்பாலான சிங்கள மக்களுக்கு தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளோ, அரசியல் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியமைக்கான காரணங்களோ அல்லது யுத்த காலத்தில் அரசும் அரச படைகளும் நிகழ்த்திய அராஜகங்களோ தெரியாது. அதே நேரம் எமது தமிழ் தலைமைகளும் சிங்கள மக்களுக்கு அவற்றை புரியவைப்பதற்கு தகுந்த முயற்சிகளை எடுக்கவும் இல்லை.

அதே போல் பெரும்பாலான தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு ஜே.வி.பி கிளர்ச்சிக்கான காரணங்களோ சிங்கள அடித்தட்டு மக்களின் பிரச்சனைகள் பற்றியோ தெரியாது.அதே போல் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு முஸ்லிம் மக்களின் அபிலாசைகள்,பிரச்சனைகள் பற்றியோ பெரும்பாலான முஸ்லிம் மக்களுக்கு தமிழ் மக்களின் அபிலாசைகள்,பிரச்சனைகள் பற்றியோ புரிந்துணர்வு கிடையாது.  இனப்பிரச்சனை இன்னும் ஓர் பூதாகரமான பிரச்சனையாக அனைவரையும் பயமுறுத்துவதற்கு பிரதான காரணமும் இனக்குழுக்களிட்கிடையேயான புரிந்துணர்வின்மை தான். இனங்களிடையே புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கவேண்டிய ஊடகங்கள் தமது கடமையை மறந்து அரசியல்வாதிகளுக்கு ஊதுகுழலாக செயற்படுவது இலங்கையின் சாபக்கேடு. Groundviews மற்றும் சில சுயாதீன ஊடகவியலாளர்களும் மாத்திரமே இதற்கு விதிவிலக்கு.

இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசியல்வாதிகள் இதயசுத்தியுடன் செயற்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதைப் போல அறிவீனமான செயல் எதுவும் இருக்கமுடியாது. உண்மையில்  இனப்பிரச்சனையும் இனங்களிடையே புரிந்துணர்வின்மையும் ஏற்படுவதற்கு பிரதான காரணமும் இனப்பிரச்சனையால் அதிகம் நன்மையடைந்தோரும் அரசியல்வாதிகள் தானே. நல்லிணக்கம் ஏற்பட்டு இனப்பிரச்சனை தீர்க்கப்ப்படுமானால், மக்களின் கண்களை மறைத்துள்ள இனவாத இருள் விலகி மக்கள் சிந்திக்க ஆரம்பிக்கையில் முதலில் உருளப்போவது அரசியல்வாதிகளின் தலைகள் தானே. எனவே எந்தவொரு  சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதியும் நல்லிணக்கம் ஏற்படுவதை விரும்பப்போவதில்லை.

“Those who judge will never understand and those who understand will never judge” என்பது ஓர் பிரபலமான ஆங்கில மேற்கோள். அரசியல்வாதிகளும் அவர்களின் ஊதுகுழல்களாக செயற்படும் வெகுஜன ஊடகங்களும்  பிற இனக்குழுக்கள் பற்றிய தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் விதைத்திருக்கின்றார்கள். இவ் விதைகள் வேரூன்றி பெரு விருட்சமாய் வளர்ந்து பெருமளவு மக்கள் பிற  இனங்களைச் சார்ந்தோரை சக நாட்டவராக அன்றி அந்நியராக நோக்குகின்ற, எதையும் சரியாக தெரிந்துகொள்ளாமலே  “அவர்கள் அப்படித்தான்” என்று முற்கூட்டியே முடிவெடுக்கின்ற ஓர்   நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றது. மக்கள் மனங்களில் நிலைபெற்றுள்ள தவறான எண்ணங்கள்  நீங்கி  பிற இனங்களை சேர்ந்த மக்களை சக நாட்டவராய், சக மனிதர்களாய் மதித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அபிலாசைகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மக்களுக்கு எப்போது ஏற்படுகின்றதோ அன்று தான் நாம் நல்லிணக்கத்திற்கான பாதையில் முதல் அடியை எடுத்து வைப்போம்.அது வரை நல்லிணக்கம் என்பது வெறும் வார்த்தையே அன்றி வேறேதுமல்ல.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s